கரூர் மாவட்டத்தில் திடீர் மழை

கரூர் மாவட்டத்தில் திடீர் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திடீர் மழை
கரூரில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாலை 6 மணியளவில் கருமேகங்கள் திரண்டு திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் பெய்தது. இந்த திடீர் மழையால் பணிக்கு சென்று திரும்பியவர்கள் அவதியடைந்தனர். இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஊர்ந்து சென்றன. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். இதனால் கரூரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
குளித்தலை
குளித்தலை பகுதியில் கடந்த 2 நாட்களாக வெயில் அதிக அளவில் இருந்தது. இந்தநிலையில் லேசான தூறல் மழை பெய்தது. இதையடுத்து நேற்று வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் இரவு சுமார் 7 மணி அளவில் லேசாக தொடங்கிய மழை இடைவிடாமல் சுமார் அரை மணி நேரம் பலத்த மழையாக பெய்தது. இதனால் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. குளித்தலை ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகள் தங்களுடைய வீட்டிற்கு செல்ல முடியாமல் மழை விடும் வரை ரெயில் நிலையத்திலேயே காத்திருந்தனர். பின்னர் மழை விட்ட பின்பு அங்கிருந்து கிளம்பி தங்கள் வீடுகளுக்கு சென்றனர். இந்த மழையில் நனைந்தபடியே குளித்தலை பஸ் நிலையத்தில் பயணிகள் பஸ்சிற்காக காத்திருந்தனர். சாலை மற்றும் தெருக்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. பலத்த மழைக்கு பின்னர் குளிர்ந்த காற்றுடன் மழை தூரிக்கொண்டே இருந்தது.
தோகைமலை
தோைகமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக தோகைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்ேவறு இடங்களில் மரங்கள் முறிந்து கீேழு விழுந்து கிடக்கிறது. மேலும் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்து தேங்கி நிற்கிறது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் குளிர்ந்து காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
க.பரமத்தி
கரூர் மாவட்டம், தும்பிவாடி சுற்றியுள்ள பவித்திரம், பெரியதாதம்பாளையம், பள்ளபாளையம், ஆனூர், தும்பிவாடி, அணைப்பாளையம், காசிபாளையம், எலவனூர், எல்லமேடு, தொக்குப்பட்டி, ராஜபுரம், புஞ்சைகாளிகுறிச்சி, நஞ்சைகாளிகுறிச்சி, சூடாமணி, ஆகிய ஊராட்சிகளில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் தும்பிவாடி சுற்றுவட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் சின்னதாராபுரம், தென்னிலை, க.பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. இதேபோல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.






