வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் திடீர் போக்குவரத்து நெரிசல்
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் திடீர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடைகள் அணிந்து மண்பானையில் பொங்கல் வைத்து சூரியனை வணங்குவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ளதால் விடுமுறை தினமான நேற்று வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் புத்தாடைகள், பானைகள், கரும்பு உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வேலூர் நகருக்கு படையெடுத்தனர். குறிப்பாக ஜவுளிக்கடைக்கு பலர் குடும்பம், குடும்பமாக சென்று தங்களுக்கு பிடித்த துணிகளை தேர்வு செய்தனர். புத்தாடைகள், பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக ஏராளமானோர் வேலூருக்கு வந்தால் நேற்று கிரீன் சர்க்கிள் பகுதியில் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நீண்டவரிசையில் அணிவகுந்து நின்றன. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போக்குவரத்து சீரானது.