தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் கோடை விழா


தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் கோடை விழா
x
தினத்தந்தி 20 Jun 2023 8:25 PM GMT (Updated: 21 Jun 2023 11:12 AM GMT)

தஞ்சை தென்னகப்பண்பாட்டு மையத்தில் கோடை விழாவை இன்று (புதன்கிழமை) எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தொடங்கி வைக்கிறார். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சை தென்னகப்பண்பாட்டு மையத்தில் கோடை விழாவை இன்று (புதன்கிழமை) எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தொடங்கி வைக்கிறார். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

இது தொடர்பாக தென்னகப்பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாரம்பரிய கலைகள்

இந்தியாவின் கிராமப்புற பாரம்பரிய கலைகளையும், பாரம்பரிய பழங்குடி கலைகளையும் தென்னகப்பண்பாட்டு மையம் பாதுகாத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைகளை பொதுமக்கள் நேரில் கண்டு களிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலைநிகழ்ச்சிகள் கோடை விழா என்ற பெயரில் இன்று (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு தஞ்சை தென்னகப்பண்பாட்டு மைய திறந்தவெளி கலையரங்கில் தொடங்குகிறது.

விழாவை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தொடங்கி வைக்கிறார். இந்த விழா வருகிற 25-ந் தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. இந்த கோடைவிழா பாபநாசம் மேலவீதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (வித்யா பாடசாலை), திருச்சி பெல் வளாகம், திருச்சி கலைக்காவேரி கவின் கல்லூரி, மயிலாடுதுறை ஏ.வி.சி. மைதானம் எதிரே உள்ள திருமண மண்டபம் ஆகிய இடங்களிலும் நடக்கிறது.

400 கலைஞர்கள்

இந்த விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா, கோவா, ஒடிசா, மராட்டியம், குஜராத், ஜார்கண்ட், மேற்குவங்காளம், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 400 கலைஞர்கள் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர்.

அத்துடன் பழங்குடியினர் கூட்டுறவு விற்பனை வளர்ச்சி கூட்டமைப்பு சார்பில் கைவினை கலைஞர்களின் பொருள் கண்காட்சி மற்றும் உணவு திருவிழா 5 நாட்கள் தினசரி மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. முன்னதாக இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு உலக யோகா தினம் மற்றும் உலக இசை தின நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தென்னகப்பண்பாட்டு மையத்தில் வாராந்திர கலைவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு சலங்கை நாத விழா வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடத்தப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது நிர்வாக அலுவலர் சீனிவாசன் அய்யர், அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story