கோடை விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


கோடை விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 23 May 2023 6:45 PM GMT (Updated: 23 May 2023 6:46 PM GMT)

கொடைக்கானலில் கோடை விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் பணிகளை கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்

கோடை விழா

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி கோடை விழா, 60-வது மலர் கண்காட்சியுடன் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் பிரையண்ட் பூங்காவில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பூங்கொடி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகள், பூந்தொட்டிகள் அமைக்கும் பணி, விழா நடைபெறும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து இருப்பது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஆலோசனை கூட்டம்

அதனைத் தொடர்ந்து கோடை விழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடந்தது. இதில் ஆர்.டி.ஓ. ராஜா, நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், பொறியாளர் முத்துக்குமார், தாசில்தார் முத்துராமன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) சுதா, போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சைனி, தோட்டக்கலை அலுவலர் சிவபாலன், தீயணைப்பு அலுவலர் அன்பழகன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொடைக்கானல் நகருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து, குடிநீர், கழிப்பறை, சுகாதார வசதிகள் செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் நகருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளிடம் அலுவலர்கள் கனிவாகப் பேசி நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்தும் செய்து தர வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மீட்பு பணிக்கு தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருக்கவும். அவசரகால உதவிக்காக ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவர்களும் தயார் நிலையில் இருக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கூடுதல் பஸ்கள் இயக்கம்

நகராட்சியின் சார்பில் தூய்மை பணியில் கூடுதல் பணியாளர்களை நியமிக்கப்பட்டு இரவு, பகல் என்று குப்பைகளை உடனே அகற்றும் பணியில் ஈடுபட உள்ளனர். அத்துடன் தொற்றுநோய் ஏற்படாத வண்ணம் கண்காணித்து சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

போக்குவரத்து கழகத்தின் சார்பில் 25 கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் தேவைப்படும் பட்சத்தில் அதிக பஸ்கள் விட நடவடிக்கை எடுக்கப்படும்.

படகு போட்டி

விழாவையொட்டி நட்சத்திர ஏரியில் படகு போட்டி 9 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. முன்னதாக காலை 8.45 மணி முதல் மீட்பு குழுவினர் கவச உடையுடன் தயார் நிலையில் இருப்பார்கள்.

வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களில் கழிப்பறை, வாகன நிறுத்துமிடம், குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் வனவிலங்குகள் நகர் பகுதிக்குள் நுழையாமல் இருக்க வனத்துறை மூலம் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரையண்ட் பூங்காவை இரவு 7 மணி வரை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் கூடுதலாக 80 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மோட்டார் சைக்கிள் போலீஸ் ரோந்து வாகனம் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story