தமிழக காங்கிரஸ் கட்சி ஐ.சி.யூ.வில் உள்ளது - அண்ணாமலை பேச்சு

தமிழ்நாட்டின் ஐசியூவில் உள்ள காங்கிரஸ் கட்சி திமுக என்ற ஆக்சிஜனைக் கொண்டு சுவாசிக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
தமிழக காங்கிரஸ் கட்சி ஐ.சி.யூ.வில் உள்ளது - அண்ணாமலை பேச்சு
Published on

சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, சென்னையில் இன்று இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜனதா கட்சி வளர்ந்து வருகிறது. நேர்மையான முறையில் மக்களை சந்தித்து தமிழகத்திலும் நிச்சயம் ஆட்சி அதிகாரத்துக்கு வருவோம். மகாராஷ்டிராவில் வாரிசு அரசியலுக்கு எதிராக சிவசேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டே உருவானது போல தமிழகத்திலும் உருவாக வாய்ப்பு உள்ளது என்றுதான் சொல்லி உள்ளேன்.

ஏக்நாத் ஷிண்டேவை நாங்கள் உருவாக்குவோம் என்று நான் கூறவில்லை. குடும்ப கட்சிகளின் ஆதிக்கம் இருக்கும் மாநிலங்களில் இதுதான் நிலைமை. பாரதிய ஜனதா கட்சி எந்த தனிமனிதனையும் நம்பி இல்லை. புதியவர்கள் பலர் இந்த கட்சியில் உருவாவார்கள். அவர்களுக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெட்டி ஒதுக்கக்கூடிய நிலையிலேயே பிரிந்து கிடக்கிறது. அதற்கான பெவிகுயிக்கை வாங்கி கொடுக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இதனை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழக காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஐ.சி.யூ.விலேயே உள்ளது. கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் போக மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடனேயே ஒட்டிக்கொண்டுள்ளது. தி.மு.க. கொடுக்கும் ஆக்சிஜனிலேயே காங்கிரஸ் உயிர் வாழ்கிறது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 24 எம்.பி.க்களை பா.ஜனதா கட்சி பெறும். இதனை காங்கிரஸ்காரர்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com