தமிழ்நாடு தினம் எப்போது..? இந்த ஆண்டும் தொடரும் சர்ச்சை.. வைரலாகும் ஹேஷ்டேக்


தமிழ்நாடு தினம் எப்போது..? இந்த ஆண்டும் தொடரும் சர்ச்சை.. வைரலாகும் ஹேஷ்டேக்
x
தினத்தந்தி 1 Nov 2023 7:07 AM GMT (Updated: 1 Nov 2023 8:57 AM GMT)

தமிழ்நாடு என மாற்றி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18ஆம் தேதிதான் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

1956-ம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்த நாளையே இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மாநில நாளாக கொண்டாடி வருகின்றன. தமிழ்நாட்டிலும் 2019 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதும், தமிழ்நாடு நாளில் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என மாற்றி 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகே அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என பெயர் பெற்றது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18ஆம் தேதிதான் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என 2021ம் ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும், நவம்பர் 1 ஆம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவுகூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்று பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள் என பல தரப்பிலும் வலியுறுத்தியதாக முதல்-அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டு சர்ச்சையானது. இந்த சர்ச்சை இந்த ஆண்டும் தொடர்கிறது. நவம்பர்1-ம் தேதிதான் தமிழ்நாடு நாள் என வலியுறுத்தி வருவோர், இன்று காலை முதலே #தமிழ்நாடுநாள்_நவம்பர்01 என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர். தமிழ்நாடு தின வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றனர்.

சென்னை மாகாண பகுதிகள் பிரிக்கப்பட்டு புதிய மாநிலங்கள் நவம்பர் 1-ல் உருவாக்கப்பட்ட நாளில் தமிழ்நாடு அமைப்பு தினத்தை தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். அவரது கருத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து பதிவிட்டுள்ளார்.

ஆனால் 'நவம்பர் 1: எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்!' என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

நவம்பர் 1: எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்!

திருத்தணியும் தென்குமரியும் இன்று தமிழ்நாட்டின் பகுதிகளாக இரு திசைகளில் திகழ்கிறதென்றால் அது எளிதில் நடந்துவிடவில்லை. எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற, தமிழ்நலம் மிக்க போராட்டத்தால்தான் நமக்குரிய பல பகுதிகளை மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் பெறமுடிந்தது. அத்தகைய மேன்மைமிகு தமிழ் தியாகிகளின் நினைவை மறவாது போற்றுவது நம் கடமை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story