மழைக்காலங்களில் மக்களை நோயில் இருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்
மழைக்காலங்களில் மக்களை நோயில் இருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளது. பரவலாக தமிழகமெங்கும் மழை பெய்து வருகிறது. இந்த மழைக்காலத்தில் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
ஏழை-எளிய, நடுத்தர மக்கள் அதிகமாக ஆரம்ப சுகாதார நிலையங்களையும், அரசு பொது மருத்துவமனைகளையுமே நாடுகின்றனர். இதனால் அவர்களின் வசதிக்காக இன்னும் அதிகமாக நடமாடும் மருத்துவமனைகளையும், மருத்துவ முகாம்களையும் ஏற்படுத்தி மழைக்காலங்களில் மக்களை நோயில் இருந்து காக்க கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.
தற்போது சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி முற்றுபெறாமல் கொசுவின் பிறப்பிடமாக திகழ்கிறது. அவற்றையும் முழுமையாக முடிக்கவேண்டும். மக்களிடையே முறையான விழிப்புணர்வையும், அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளையும், முன்னெச்சரிக்கையாக தங்குதடையில்லாமல் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.