வாரிசுகளால் தமிழ்நாடு வளர்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


வாரிசுகளால் தமிழ்நாடு வளர்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 20 July 2023 6:24 AM GMT (Updated: 20 July 2023 6:48 AM GMT)

வாரிசுகளால் தமிழகத்தின் ஏராளமான இளைஞர்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை குரோம்பேட்டையிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழாவை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நான் அரசியல் பேசுவதாக யாரும் நினைக்க வேண்டாம். வாரிசுகளால் தமிழகத்தின் ஏராளமான இளைஞர்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர். வாரிசுகள் நினைத்தால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சேவை அளிக்க முடியும்.. கல்வி, சுகாதாரத்தில் சிறந்து விளங்குவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்.

இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பட்டியலில், தமிழ்நாட்டின் எம்.ஐ.டி இடம் பெறுவது தமிழ்நாட்டிற்கு கிடைக்கக்கூடிய பெருமை. இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி 'ஏவுகணை மனிதர்' என்று போற்றப்படும் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் படித்த கல்லூரி என்பதை விட வேறு பெருமை தேவையில்லை. படிப்பவர்கள் அனைவரையும் பன்முக ஆற்றல் கொண்டவர்களாக எம்.ஐ.டி. வளர்த்தெடுக்கிறது.

தமிழ்நாட்டு மாணவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும். பன்முக ஆற்றல் கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே 'நான் முதல்வன் திட்டம்'. தமிழக மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி அறிவாற்றலிலும் முதலிடத்தைப் பெற வேண்டும். அரசுப்பள்ளியில் பயின்ற பெண் பிள்ளைகளுக்காகவே 'புதுமை பெண்'திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி வழங்குவதே எங்கள் அரசின் நோக்கம். பள்ளிக்கு, கல்லூரிகளுக்கு செல்லாதவர்களையும் பள்ளி, கல்லூரிக்கு அழைத்து வருவதே அரசின் நோக்கம். தமிழகத்தில் கல்வித்தரத்தை மேம்படுத்த, மாணவர்களின் வசதிக்காக பல திட்டங்களை அரசு வகுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழாவில், கல்லூரியை மேம்படுத்த சில புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

‣ அதி நவீன உள்விளையாட்டு அரங்கத்தோடு இணைந்த கலையரங்கம் கட்டுவதற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு!

‣ கற்றல்வளாகம் மற்றும் பவளவிழா பூங்கா அமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு;

‣ 1,000 பேர் அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவிப்புகளை வெளியிட்டார்.


Next Story