தஞ்சை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்


தினத்தந்தி 11 July 2023 8:28 PM GMT (Updated: 12 July 2023 11:33 AM GMT)

தஞ்சை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 4 எம்.பி.க்கள், 2 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 4 எம்.பி.க்கள், 2 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நேற்று நடந்தது.. கூட்டத்திற்கு குழுத்தலைவர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், சண்முகம், கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. பேசியதாவது:-

தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கண்காணிக்கும் பொருட்டு மாவட்டந்தோரும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் இந்த குழு கூட்டம் நடத்தப்பட்டது,

விரைவாக முடிக்கவேண்டும்

கூட்டத்தில் மத்திய அரசு திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை இந்தியா இயக்கம், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டங்கள். மாவட்ட திறன் பயிற்சி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், விதை கிராம திட்டம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததோடு, அவற்றின் களப்பணிகளை நல்ல முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என விவாதிக்கப்பட்டது.

இந்த ஆய்வில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், அன்பழகன், மேயர்கள் சண்.ராமநாதன், சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி மற்றும் மாநகராட்சி ஆணையர்கள், அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியக்குழு தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story