டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வீரபாண்டி கெம்பே நகர், அம்பேத்கர் நகர், செல்வி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாநகராட்சி 53-வது வார்டில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியை சேர்ந்த பாரதிதாசன் நகர், அம்மன் நகர், குன்னாங்கல்பாளையம், சிவன்மலை ஆண்டவர் நகர், ஆர்.ஆர்.கார்டன் ஆகிய பகுதியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். டி.கே.டி. மில் பொங்கலூர் சாலையை பிரதான சாலையாக பயன்படுத்தி வருகிறோம். எனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது.
இந்த நிலையில் பாரதிதாசன் நகர், கெம்பே நகருக்கு இடையே டாஸ்மாக் கடை அல்லது தனியார் மதுபான பார் அமைக்க சிலர் முயன்று வருவதாக தெரிகிறது. இந்த கடை அமைந்தால் பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் அந்த சாலை வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே டாஸ்மாக் கடை அல்லது தனியார் மதுபான பார் அமைக்கக்கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.