புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு


புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
x
திருப்பூர்

அனுப்பர்பாளையம்,

திருப்பூர்

திருப்பூர் அணைபாளையம் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் துணை மேயர் பாலசுப்பிரமணியம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

டாஸ்மாக் கடை

திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டு அணைபாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை புதிதாக திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அனைத்து கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கான பணிகள் நடைபெற்றுள்ளது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் அ.தி.மு.க. கவுன்சிலர் தங்கராஜ், பா.ஜனதா. கவுன்சிலர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ள கட்டிடத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி துணை மேயர் எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் மற்றும் 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறக்காமல் இருக்கவும், வேறு இடத்திற்கு கடையை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் துணை மேயர் உறுதியளித்தார். இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, அணைபாளையம் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு பொதுமக்களுக்கு இடையூறாகவும், பாதிப்பாகவும் அமையும். பிரதான சாலையாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதுடன், சட்ட விரோத செயல்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பபட்டிருந்தது.


Next Story