பூந்தமல்லி அருகே இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை - தாயின் கள்ளக்காதலன் வெறிச்செயல்

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்தை நரித்து கொலை செய்யப்பட்டார். தலைமறைவான தாயின் கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி அருகே இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை - தாயின் கள்ளக்காதலன் வெறிச்செயல்
Published on

பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் அம்சவல்லி (வயது 36). இவர், கணவரை பிரிந்து 4 வருடங்களாக தனியாக வசித்து வந்தார். அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய மகள் சங்கீதா (18). தந்தையுடன் இருந்த இவர், கடந்த சில மாதங்களாக தனது தாய் அம்சவல்லியுடன் வந்து தங்கி இருந்தார். அடுத்த மாதம் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

நேற்று காலை அம்சவல்லி வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சங்கீதா மட்டும் தனியாக இருந்தார். அம்சவல்லி இரவில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது, தனது மகள் சங்கீதா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அணிந்திருந்த தங்க கம்மல் மற்றும் கொலுசும் மாயமாகி இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார், சங்கீதா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில் அம்சவல்லிக்கு, ராஜு (38) என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அம்சவல்லி வேலக்கு சென்ற நிலையில் வீட்டுக்கு வந்த ராஜு, சங்கீதாவை கொன்றுவிட்டு கம்மல், கொலுசு ஆகியவற்றை எடுத்துச்சென்றது தெரிந்தது.

சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்சவல்லியிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது கள்ளக்காதலன் ராஜுவை தேடி வருகிறார்கள். அவர் கைதானால்தான் சங்கீதா கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com