கண்காணிப்பு கேமராக்களை திருடிய வாலிபர் கைது


கண்காணிப்பு கேமராக்களை திருடிய வாலிபர் கைது
x

பள்ளி வேனில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். காட்சிகள் பதிவாகும் கருவியை எடுத்து செல்லாததால் சிக்கினார்.

திண்டுக்கல்

கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்தவர் சங்கர். இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி வேனில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். தினமும் இவர், அந்த பள்ளியில் படிக்கிற பட்டிவீரன்பட்டியை சேர்ந்த மாணவ-மாணவிகளை வேனில் ஏற்றி செல்வது வழக்கம்.

பள்ளி முடிந்ததும் மீண்டும் மாணவர்களை பட்டிவீரன்பட்டியில் இறக்கி விட்டு, காந்திபுரத்தில் உள்ள ஒருவருக்கு சொந்தமான செட்டில் வேனை நிறுத்தி விட்டு சங்கர் சென்று விடுவார்.

அதன்படி நேற்று முன்தினம் வேனை நிறுத்தி விட்டு சங்கர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று காலை வேனை பார்த்தபோது அதில் பொருத்தப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்கள், 2 எல்.சி.டி. மானிட்டர் ஆகியவை திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வாலிபர் கைது

இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் சங்கர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கேமரா காட்சிகள் பதிவாகி உள்ள டி.வி.ஆர். கருவியை போலீசார் சோதனை செய்தனர்.

அதில், அய்யம்பாளையத்தை சேர்ந்த மாருதீஸ்வரன் (33) என்பவர் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் எல்.சி.டி. மானிட்டர்களை திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கண்காணிப்பு கேமராக்கள், மானிட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கண்காணிப்பு ேகமராக்களை திருடிய மாருதீஸ்வரன், காட்சிகள் பதிவாகும் டி.வி.ஆர். கருவியை எடுத்து செல்லாததால் போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story