கடனை திருப்பி செலுத்தாததால் வாலிபருக்கு கத்திக்குத்து
மயிலாடுதுறை அருகே கடனை திருப்பி செலுத்தாததால் வாலிபரை கத்தியால் குத்திய நிதிநிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை அருகே கடனை திருப்பி செலுத்தாததால் வாலிபரை கத்தியால் குத்திய நிதிநிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
கடன் தவணை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி மகன் தன்ராஜ் (வயது 30). மயிலாடுதுறை அருகே முளப்பாக்கம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் அழகர்சாமி மகன் அஜித்குமார்(26). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்ராஜ் தனியார் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனுக்கான தவணையை செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி சாலையில் நின்று கொண்டிருந்த தன்ராஜை பார்த்த அஜித்குமார் நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தவணைத்தொகையை செலுத்தவில்லை, வட்டியோடு அசல் தொகையை சேர்த்து உடனே தரவேண்டும் என்று கேட்டுள்ளார்.
கத்திக்குத்து
இதனால் தன்ராஜுக்கும், அஜித்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது. இதில் அங்குள்ள பழச்சாறு கடை ஒன்றில் இருந்த கத்தியை எடுத்து வந்த அஜித்குமார் தன்ராஜை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவரது கை தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த தன்ராஜ் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் அஜித்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.