நத்தம் அருகே முத்துக்கருப்பணசாமி கோவிலில் புரவி எடுப்பு திருவிழா


நத்தம் அருகே முத்துக்கருப்பணசாமி கோவிலில் புரவி எடுப்பு திருவிழா
x

நத்தம் அருகே முத்துக்கருப்பணசாமி கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பெரிய அரவங்குறிச்சியில் பிரசித்திபெற்ற முத்துக்கருப்பணசாமி, கரையம்மன், மலையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 24-ந்தேதி கருப்பணசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடந்தது. அப்போது வாணவேடிக்கைகளுடன், அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் கரையம்மனுக்கு பொங்கல் வைத்து, கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.

இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பக்தர்கள் புரவி எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மண்ணால் செய்யப்பட்ட குதிரை, நாய், காளை உள்ளிட்ட புரவிகளை தங்களது தலை, தோளில் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கோவில் வளாகத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த திருவிழாவில் பெரிய அரவங்குறிச்சி, செந்துறை, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பூசாரி வகையறாக்கள், 8 ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story