பூமாலை அய்யனார் கோவில் குடமுழுக்கு
வேதாரண்யம் அருகே புஷ்பவனம் பூமாலை அய்யனார் கோவில் குடமுழுக்கு நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம் அருகே புஷ்பவனம் பூமாலை அய்யனார் கோவில் குடமுழுக்கு நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பூமாலை அய்யனார் கோவில்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புஷ்பவனம் கொத்தங்காடு என்கிற இடத்தில் பழமை வாய்ந்த பூமாலை அய்யனார் கோவில் உள்ளது. பூர்ணாம்பிகா, புஷ்களாம்பிகா சாமிகளுடன் பூமாலை அய்யனார் கருணை பொங்க, மேற்கு நோக்கிய தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோவிலில் வழிவீரன், முனி, பெரியாச்சி, தூண்டிக்காரன், கொம்புகாரன் உள்ளிட்ட தெய்வங்களின் தனி சன்னதிகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன.
குழந்தை பாக்கியம், வீடு கட்டுதல், வேலைவாய்ப்பு, உடல் நலக் கோளாறு சீராகுதல் உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றித் தரக்கோரி புதன், சனிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிடா வெட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.
திருப்பணிகள்
பல்வேறு சிறப்புகள் மிக்க இந்த பூ மாலை அய்யனார் கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தது.
மூலவர் சன்னதி, வழிவீரன், முனி, பெரியாச்சி, தூண்டிக்காரன், கொம்புகாரன் உள்ளிட்ட தெய்வங்களின் தனி சன்னதிகள் வண்ணங்கள் தீட்டி புதுப்பிக்கப்பட்டன.
மேலும் கோவிலின் பின்புறம் 100 மீட்டர் தொலைவில் அலங்கார நுழைவு தோரண வாயில் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது.
குடமுழுக்கு
அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக கடந்த 6-ந் தேதி காலை 6.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பூர்ணாகுதி யாகம் நடந்தது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து இரவு பூர்ணாகுதி நடந்தது.
இதையடுத்து நேற்று காலை 7 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை நடந்தது. பின்னர் காலை 10 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை காட்டப்பட்டது. காலை 11 மணியளவில் கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.