சித்தரேவு வரதராஜபெருமாள் கோவிலில் திருப்பணிகள்; அதிகாரி ஆய்வு
சித்தரேவு வரதராஜபெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தில் பழமையான வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளியுள்ளார். இந்தநிலையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இந்துசமய அறநிலையத்துறை முடிவு செய்து, திருப்பணிகள் செய்வதற்கான பாலாலய பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து தற்போது கோவிலில் மூலஸ்தான விமானம் சீரமைத்தல், சுற்றுச்சுவர் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, கோவில் ஆய்வாளர் காசிமணிகண்டன், செயல் அலுவலர் கனகலட்சுமி, தலைமை அர்ச்சகர் சேஷன் மற்றும் திருப்பணி குழுவை சேர்ந்தவர்கள் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பின்பு இணை ஆணையர் பாரதி கூறுகையில், சித்தரேவு வரதராஜபெருமாள் கோவிலில் திருப்பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலங்களை அளவீடு செய்வதற்காக 'ரோவர்' என்ற அதிநவீன கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்தரேவு வரதராஜபெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது என்றார்.