மின்மாற்றிகளில் 'சர்க்யூட் பிரேக்கர்' பொருத்தி சோதனை


மின்மாற்றிகளில் சர்க்யூட் பிரேக்கர் பொருத்தி சோதனை
x
தினத்தந்தி 11 Oct 2023 7:30 PM GMT (Updated: 11 Oct 2023 7:30 PM GMT)

கூடலூரில் மின்சாரம் தாக்கி காட்டுயானைகள் உயிரிழப்பதை தடுக்க மின்மாற்றிகளில் ‘சர்க்யூட் பிரேக்கர்' பொருத்தி சோதனை நடைபெற்றது.

நீலகிரி

கூடலூரில் மின்சாரம் தாக்கி காட்டுயானைகள் உயிரிழப்பதை தடுக்க மின்மாற்றிகளில் 'சர்க்யூட் பிரேக்கர்' பொருத்தி சோதனை நடைபெற்றது.

காட்டுயானைகள்

நீலகிரி மாவட்டமானது அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களை கொண்ட மலைப்பகுதியாக விளங்குகிறது. இங்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. இதற்காக வனப்பகுதிகள், தேயிலை தோட்டங்கள் வழியாக மின்கம்பிகள் செல்கிறது.

இதற்கிடையில் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழையும் காட்டுயானைகள், அந்த மின்கம்பிகளை தொடுவதால், மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

நவீன கருவி

இதை தடுக்க நீலகிரியில் மின்சாரத்துறை சார்பில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அமைக்கப்படும் மின்மாற்றிகளில் 'சர்க்யூட் பிரேக்கர்'(எம்.சி.சி.பி.) என்ற தானாக மின்சாரத்தை துண்டிக்கும் நவீன கருவி பொருத்தப்பட உள்ளது.

இதையொட்டி கூடலூர் அருகே தொரப்பள்ளியில் முதன் முறையாக 'சர்க்யூட் பிரேக்கர்' கருவியை ஒரு மின்மாற்றியில் மின்சாரத்துறையினர் பொருத்தி சோதனை செய்தனர்.

முக்கிய இடங்களில்...

இதுகுறித்து கூடலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார் கூறும்போது, தமிழகம் முழுவதும் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் இந்த கருவி பொருத்தி சோதனை செய்யப்படுகிறது. அங்கு காட்டுயானை ஏதாவது ஒரு மின் கம்பியை தொடும்போது, அந்த கருவி மூலம் தானாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடும். இதனால் காட்டுயானைகள் உயிரிழப்பதை தடுக்கலாம். வரும் நாட்களில் வனத்துறையினருடன் இணைந்து முக்கிய இடங்களில் அந்த கருவி பொருத்தப்பட உள்ளது என்றார்.


Next Story