புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் 2 அதிகாரிகளை அறைக்குள் வைத்து பூட்டிய கவுன்சிலர்கள் அடுத்தடுத்த போராட்டங்களால் பரபரப்பு
புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் 2 அதிகாரிகளை அறைக்குள் வைத்து பூட்டி கவுன்சிலர்கள் சிறை வைத்தனர். அடுத்தடுத்து நடந்த போராட்டங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புவனகிரி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லை. பரங்கிப்பேட்டை பேரூராட்சியின் செயல் அலுவலராக இருக்கும் திருமூர்த்தி, கூடுதலாக புவனகிரி பேரூராட்சியை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தங்களுக்கு சம்பளம் பிடித்து வழங்கப்பட்டது தொடர்பாக நேற்று காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் கந்தன் தலைமையில் துணைத்தலைவர் முல்லைமாறன் மற்றும் கவுன்சிலர்கள் அலுவலகத்துக்கு திரண்டு வந்து, துப்புரவு தொழிலாளர்களின் வருகை பதிவேட்டில், அவர்களது வருகை நாட்களை குறைத்து எழுதியதாக கூறி பேரூராட்சி தலைமை எழுத்தர் ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் திருமூர்த்தி ஆகியோரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அலுவலகத்துக்குள் வைத்து பூட்டினர்
அப்போது, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கி போய் உள்ளது. இந்த நிலையில் துப்புரவு பணியாளர்கள், பிளம்பர், எலக்ட்ரீசியன் போன்ற ஊழியர்களுக்கும் சம்பளம் குறைத்து வழங்கப்பட்டுள்ளது என்று கவன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திடீரென அங்கிருந்த சிலர் அலுவலக கோப்புகளை தூக்கி, ஒரு அதிகாரி மீது வீசினர்.
இதை தொடர்ந்து, 2 அதிகாரிகளையும் அலுவலகத்தின் அறையின் உள்ளே வைத்து, கதவை வெளிப்பகுதியில் கவுன்சிலர்கள் பூட்டி சிறைவைத்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதன்பின்னர் அங்கிருந்த அலுவலக பணியாளர்கள், கதவை திறந்து அதிகாரிகளை வெளியே வர செய்தனர். புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த அடுத்தடுத்த போராட்டங்களால், நேற்று அலுவலக வளாகமே பரபரப்புடன் காணப்பட்டது.