ஏழை மக்களை பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது- அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி


ஏழை மக்களை பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது- அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 16 Sep 2022 6:34 AM GMT (Updated: 16 Sep 2022 8:32 AM GMT)

1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

கோவை,

கோவை ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மின் கட்டண மாற்றத்தின் விளக்கம் தெளிவாக ஒப்பீடுகளுடன் விளம்பரபடுத்தபட்டுள்ளது. அதை படித்து பார்த்தாலே விளங்கும். அ.தி.மு.க. ஆட்சியில் 64 முதல் 138 விழுக்காடு வரை உயர்த்தி இருக்கிறார்கள். 2.37 கோடி மின் நுகர்வோரில் ஒரு கோடி மின்நுகர்வோருக்கு எந்த கட்டணமும் இல்லை. 63.35 லட்சம் மின் நுகர்வோருக்கு 2 மாதங்களுக்கு 55 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை மக்கள் பாதிப்பில்லாத வகையில் மின் கட்டணம் கொண்டு வரப்பட்டுள்ளது சிறு குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு உயர்த்த திட்டமிடப்பட்ட கட்டணம் 3217 கோடி ரூபாயினை குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோருக்கு பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எச்.டி தொழிற்சாலைகளுக்கும் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் தமிழகத்தில் குறைந்த கட்டணமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடியவர்கள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள கட்டண விவரங்களை பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும். சில நேரங்களில் மின் கட்டணம் அரசியல் ஆக்கப்படுகிறது. விசைத்தறிகளுக்கு இந்தியாவிலேயே குறைந்த மின் கட்டணம் தமிழகத்தில் தான் அளிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் விசைத்தறிகளுக்கு எச்டி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் விசைத்தறிகளுக்கு அந்த கட்டணம் இல்லை. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் விசைத்தறிகளுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தினார்கள்.

இப்பொழுது எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும். 70 பைசா மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 25 சதவீதம் மட்டுமே மின் உற்பத்தி செய்கிறோம். மற்றவற்றை வெளியில் இருந்து தான் வாங்குகின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story