எம்.எல்.ஏ.க்களிடம் சுங்க கட்டணம் கேட்டு ஊழியர்கள் கடும் வாக்குவாதம்
கள்ளக்குறிச்சிக்கு ஆய்வு செய்ய சென்ற எம்.எல்.ஏ.க்களிடம் சுங்க கட்டணம் கேட்டு ஊழியர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘பாஸ்’ காண்பித்தும் வாகனங்களை விடாததால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழுவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அண்ணாநகர் மோகன், சேலம் அருள், ஆம்பூர் விஸ்வநாதன், நாமக்கல் ராமலிங்கம் ஆகியோர் நேற்று கார்களில் தியாகதுருகத்தில் இருந்து புறப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாடூர் சுங்கச்சாவடியில் வந்தபோது, அங்கிருந்த ஊழியர்கள், வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என உறுதிமொழி குழுவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு அவர்கள் நாங்கள் எம்.எல்.ஏ.க்கள், எங்களிடம் பாஸ் உள்ளது என்று கூறியுள்ளனர்.
இருப்பினும் ஊழியர்கள் அதனை ஏற்க மறுத்து கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வாறு கட்டவில்லையென்றால் வாகனங்களை விட முடியாது என கூறினர்.
வாக்குவாதம்
இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள், உறுதிமொழி குழுவினரை திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் சுங்கச்சாவடி வழியை திறந்து கார்கள் செல்ல ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து கார்கள் புறப்பட்டபோது, சுங்கச்சாவடி ஊழியர்கள் கேட் போட்டு கார்களை மீண்டும் வழிமறித்து தடுத்தனர். இதில் மோகன் எம்.எல்.ஏ. காரின் முன்பகுதியில் கீறல் ஏற்பட்டது. இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நடவடிக்கை எடுக்க பரிந்துரை
இதனிடையே இதுபற்றி தகவல் அறிந்த கலெக்டர் ஷ்ரவன்குமார், போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், உதயசூரியன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், உறுதிமொழி குழுவினருக்கு பாஸ் இருந்தும், அவர்களின் கார்களை எப்படி தடுக்கலாம் என தட்டிக்கேட்டனர்.
இதையடுத்து சுங்கச்சாவடி மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உறுதிமொழி குழுவினர் போலீசாருக்கு பரிந்துரை செய்தனர்.
இரவு வரை கட்டணம் இல்லை
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாங்கள் ஆய்வு செய்ய உள்ளோம். இதன் காரணமாக எங்களது மற்றும் அரசு அதிகாரிகளின் கார்கள் சுங்கச்சாவடி வழியாக செல்லும். எனவே நாங்கள் ஆய்வு செய்து முடிக்கும் வரை எந்த வாகனங்களுக்கும் இங்கு சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் பரிந்துரை செய்தனர்.
உடனே இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு, சுங்கச்சாவடி ஊழியர்களிடம் தெரிவித்தார். அதன்படி மாடூர் சுங்கச்சாவடியில் இரவு வரை எந்த வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.