அரசு தொடக்கப்பள்ளி கட்டிட முகப்பு இடிந்து விழுந்தது
கறம்பக்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளி கட்டிட முகப்பு இடிந்து கொட்டியது. இப்பகுதியில் தொடரும் பள்ளி கட்டிட விபத்துகளால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கட்டிட முகப்பு இடிந்து கொட்டியது
கறம்பக்குடி அருகே உள்ள பொன்னன் விடுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 94 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் ஆங்காங்கே வெடிப்புகள் ஏற்பட்டிருந்தன. மழை காலங்களில் கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் மேல்பகுதியல் நீர் கசிவும் இருந்தது.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிந்த வேளையில் மாலையில் பள்ளி கட்டிடத்தின் முகப்பு பகுதியில் உள்ள சிமெண்டு பூச்சுகள் திடீரென இடிந்து கொட்டியது. இதை கண்டு அப்பகுதியில் உள்ளவர்கள், அருகில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி செயல்படாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தொடரும் விபத்துகள்
கறம்பக்குடி பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராங்கியன்விடுதி தொடக்கப்பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து கொட்டியது. இதேபோல் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் களபம், கட்டுவான்பிறை பள்ளி கட்டிடங்களும் இடிந்து கொட்டின. பள்ளி கட்டிடங்களில் தொடரும் விபத்துகளால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை கண்டறிந்து இடித்து அகற்றும் படி உத்தரவிடப்பட்டது. கறம்பக்குடி தாலுகாவில் 30-க்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்களை இடிக்க போவதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு சில கட்டிடங்கள் மட்டுமே இடிக்கப்பட்டன. சேதமடைந்த பல பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளன.
மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில் குழந்தைகளை அச்சத்துடனேயே பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம். எனவே கறம்பக்குடி பகுதியில் உள்ள அனைத்து பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.