பிஞ்சி ஏரியை சீரமைக்கும் முதற்கட்ட பணி மார்ச் மாதத்திற்குள் முடிவடையும்
ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியை சீரமைக்கும் முதற்கட்ட பணி மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என்று அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
ராணிப்பேட்டை பிஞ்சி ஏரியை சீரமைக்கும் முதற்கட்ட பணி மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என்று அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
அமைச்சர் ஆய்வு
ராணிப்பேட்டை நகராட்சி மையப்பகுதியில் 27 ஏக்கர் பரப்பளவில் பிஞ்சி ஏரி உள்ளது. பொது மக்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு அம்சம், இயற்கை சூழலுடன் கூடிய சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு ரூ.45 கோடி மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்பட்டது. முதற்கட்டமாக ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
அதில் ஏரியில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றி கரைகளை பலப்படுத்துதல், ஏரியின் நடுவே தீவுகள் போன்ற கட்டமைப்புகள் அமைத்தல், நீர் வழித்தடம் மற்றும் அகழி, உறை கிணறுகள் அமைத்தல் போன்ற பணிகள் தொடங்கப்பட்டு நடைபெறுகிறது. இப்பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மார்ச் மாதத்திற்குள்
தற்போது வரையில் ஏரியை சுற்றி கரைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் ஏரிக்குள் வரும் பாதைகள் பிரிக்கப்பட்டு, அதற்கான வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. உறை கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கழிவு நீர் புகாமல் இருக்க அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த முதற்கட்டப் பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் முதற்கட்ட பணிக்கு நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் சமூக பங்களிப்பு நிதியினை ராணிப்பேட்டை சிப்காட் மல்லாடி டிரக்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.60 லட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் காந்தி மற்றும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
இந்தஆய்வின் போது, ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ஒசூர் மாநகராட்சி மேயர் சத்யா, பிஞ்சு ஏரி புனரமைப்பு மேம்பாட்டு திட்ட ஆலோசனை குழு உறுப்பினர் வினோத் காந்தி, நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.