சிப்காட் தொழிற்சாலைக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்


சிப்காட் தொழிற்சாலைக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்
x

காட்பாடி பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர்

கூடுதல் வகுப்பறைகள்

காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.25 லட்சம் மற்றும் கீழ்மோட்டூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.40 லட்சத்தில் மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டன. அவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.

ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு கூடுதல் வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது:-

தொழிற்சாலைக்கு அடிக்கல்

இந்த 2 பள்ளிகளையும் தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை ஆலோசித்து தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ்-2 படித்த மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக சேர்க்காடு பகுதியில் கலைக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உயர்கல்வி படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

படிப்பு மட்டுமே வாழ்க்கைக்கு வழிகாட்டும். இதனை புரிந்து மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். இங்குள்ள மக்கள் உடல் நலக்குறைவு என்றால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. அந்த சிரமத்தை போக்கும் வகையில் சேர்க்காடு பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் காட்பாடி பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. அதற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தையல் எந்திரங்கள்

அதைத்தொடர்ந்து 6 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை, 2 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 6 பேருக்கு விலையில்லா தையல் எந்திரங்களை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

விழாவில் வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, கவுன்சிலர் விமலா சீனிவாசன், முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story