கைதானவர்களை தனக்கு தெரியாது என கோர்ட்டில் சிறுமி கூறியதால் பரபரப்பு
கைதானவர்களை தனக்கு தெரியாது என கோர்ட்டில் சிறுமி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக பரபரப்பு எழுந்தது. இந்த வழக்கில் பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க. முன்னாள் நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது, புரோக்கர்களாக செயல்பட்டதாக உமா மற்றும் கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி சிகாமணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 5 பேரும் மீண்டும் ராமநாதபுரம் மாவட்ட மகிளா கோர்ட்டில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். .
நீதிபதி கோபிநாத் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குறித்து நீதிபதி கேட்டார். அப்போது யாரும் எதிர்பாராதவகையில் சிறுமி, குற்றம்சாட்டப்பட்டவர்களை யார் என்றே தெரியாது என்றும், பார்த்ததே இல்லை என்றும் திடீர் பல்டி அடித்து பிறழ் சாட்சி கூறினாராம். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து 5 பேர் மீதான விசாரணையை வரும் 17-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்பின்னர் சிகாமணி தவிர மற்ற 4 பேரும் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதே நேரத்தில் ஏற்கனவே மாஜிஸ்திரேட்டிடம் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சாட்சிகளை வைத்து வழக்கினை வலுவாக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சிகாமணிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவினை ரத்து செய்யக்கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்த மனு மதுரை ஐகோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வரும் என போலீசார் தெரிவித்தனர்.