காரின் உரிமையாளருக்கு ரூ.3.3 லட்சத்தை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும்


காரின் உரிமையாளருக்கு ரூ.3.3 லட்சத்தை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும்
x

காரின் உரிமையாளருக்கு ரூ.3.3 லட்சத்தை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அரியலூர்

காருக்கு காப்பீடு

திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டில் வசித்து வருபவர் முருகன்(வயது 42). இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் புதிய கார் ஒன்றை விலைக்கு வாங்கினார். அதற்கு பிரீமிய தொகை ரூ.15,860 செலுத்தி ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வீட்டின் முன்பாக சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த கார் காணாமல் போய்விட்டது.

ஒரு வாரமாக அவர் தேடியும், அந்த கார் கிடைக்காததால், இது குறித்து அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இழப்பீடு தர மறுப்பு

இது குறித்து காப்பீட்டு நிறுவனத்திற்கும் முருகன் தகவல் அளித்துள்ளார். ஆனால் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க 8 நாட்கள் காலதாமதம் ஏற்பட்டதை காரணம் காட்டி காப்பீட்டு நிறுவனம், முருகனுக்கு இழப்பீட்டு தொகையை தர மறுத்துவிட்டது.

இதையடுத்து காப்பீட்டுத் தொகை ரூ.3.2 லட்சமும், காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ.10 லட்சமும் கேட்டு கடந்த 2017-ம் ஆண்டு சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முருகன் வழக்கு ெதாடுத்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு விசாரணைக்காக மாற்றப்பட்டது.

தீர்ப்பு

வழக்கை விசாரித்த நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. அதில், தீர்ப்பு வழங்கப்பட்ட 8 வாரங்களுக்குள் வாகனத்தை கண்டுபிடிக்க இயலவில்லை என்ற சான்றிதழை அரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பெற்று காப்பீட்டு நிறுவனத்திடம் புகார்தாரர் சமர்ப்பிக்க வேண்டும். புகார்தாரர் தமது வாகனத்தை ரூ.4 லட்சத்துக்கு காப்பீடு செய்து 11 மாதங்கள் நிறைவடைந்து விட்டதால், சட்டப்படியான பிடித்தங்களாக 20 சதவீத தொகையை கழித்துக்கொண்டு ரூ.3.3 லட்சத்தை வட்டியுடன் காப்பீட்டு நிறுவனம், புகார்தாரருக்கு வழங்க வேண்டும். மேலும், காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரத்தை புகார்தாரருக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும், என்று கூறியுள்ளது.


Next Story