கிறிஸ்தவர்கள் ஊர்வலத்துடன் மாம்பழச் சங்க பண்டிகை தொடங்கியது
மாம்பழ சங்க பண்டிகையை முன்னிட்டு பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
மாம்பழ சங்க பண்டிகையை முன்னிட்டு பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
மாம்பழ சங்க பண்டிகை
நெல்லை சி.எஸ்.ஐ திருமண்டல மாம்பழ சங்க பண்டிகை மற்றும் வருடாந்திர ஸ்தோத்திர பண்டிகை பாளையங்கோட்டை நுாற்றாண்டு மண்டபத்தில் நேற்று தொடங்கியது.
முன்னதாக பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் ஆலயத்தில் அருள் தொண்டர்களின் தியாக நினைவு ஸ்தோத்திர ஆராதனை நடந்தது. அங்கு மிஷனரிகளின் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அங்கிருந்து நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு குளோரிந்தா ஆலயம், தெற்கு பஜார் வழியாக பாளையங்கோட்டை நுாற்றாண்டு மண்டபத்துக்கு வந்தடைந்ததனர்.
கொடியேற்றம்
அங்கு பிஷப் பர்னபாஸ் கொடியேற்றி மாம்பழ சங்க பண்டிகையை தொடங்கி வைத்தார். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உப தலைவர் சுவாமிதாஸ், குருத்துவ காரியதரிசி பாஸ்கர் கனகராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் ஜெபராஜ், எமில், மிலிட்டரி லைன் ஆலய அருட்பணி சற்குணம், கல்லூரி தாளாளர்கள் கே.பி.கே.செல்வராஜ், ஜேசு ஜெகன், காபிரியல் தேவா, ஜெயச்சந்திரன், ஜெய்கர், சாலமோன் டேவிட், மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளர் சுதர்சன், ஆரம்பப் பள்ளிகளின் மேலாளர் அருள்ராஜ் பிச்சமுத்து மற்றும் பள்ளி கல்லூரி தாளாளர்கள் தலைமை ஆசிரியர்கள் திருமண்டல அலுவலக ஊழியர்கள், மாணவ-மாணவிகள், இறைமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இன்று-நாளை
இன்று (புதன்கிழமை) காலை நுாற்றாண்டு மண்டபத்தில் திருவிருந்து ஆராதனை, மதியம் மாம்பழ சங்க பிரதான பண்டிகை நடக்கிறது. ஏழைகளுக்கு உதவி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) காலை பாளையங்கோட்டை கதீட்ரல் பேராயலயத்தில் திருமண்டல வருடாந்திர ஸ்தோத்திர பண்டிகை, திருவிருந்து ஆராதனை நடக்கிறது.