தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் கூலித்தொழிலாளியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட அலுவலக உதவியாளர்


தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் கூலித்தொழிலாளியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட அலுவலக உதவியாளர்
x

தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் கூலித்தொழிலாளியிடம் அலுவலக உதவியாளர் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை காத்பாடா பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவரது கணவர் ஞானம். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் லட்சுமியின் மாமனார் செல்வராஜ் காலமாகிவிட்ட நிலையில், கணவர் ஞானத்துக்கு சட்டபூர்வ வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக லட்சுமி தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் வெகு நாட்கள் ஆகியும் சான்றிதழ் கொடுக்காமல் வருவாய் அலுவலர்கள் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.

இதனால் நேரடியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று இது குறித்து முறையிட்டபோது, லட்சுமியிடம் பேசிய அலுவலக உதவியாளர் ஒருவர் சான்றிதழ் கிடைக்க வேண்டுமென்றால் தாசில்தாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி தனக்கு தெரிந்த சமூக ஆர்வலரை அழைத்துக் கொண்டு வட்டாட்சியர் அலுவலகம் சென்ற நிலையில், நகையை அடகு வைத்து ரூ.15 ஆயிரம் பணத்தை அலுவலக உதவியாளர் தனசேகர் என்பவரிடம் கொடுத்துள்ளார். அதை பெற்றுக்கொண்ட அலுவலக உதவியாளர் தனசேகர் சான்றிதழ் கிடைத்து விடும் எனக்கூறியதை லட்சுமியுடன் சென்ற நபர் வீடியோவாக எடுத்து வெளியிட்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story