செல்போனை தொலைத்ததால் திட்டிய பெற்றோர்... ரூ.70 ஆயிரத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்..!
செல்போனை தொலைத்ததால் பெற்றோர் திட்டியதை பொறுத்து கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவனை மீண்டும் பெற்றோரிடமே போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
ஈரோடு,
செல்போனை தொலைத்த காரணத்தால் பெற்றோர் திட்டியதை பொறுத்து கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி தங்கும் விடுதிக்கு வந்த சிறுவனை மீண்டும் பெற்றோரிடமே போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருக்கு 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு மகன் செல்போனை தொலைத்ததால் பெற்றோர் கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் கோபித்து கொண்டு சிறுவன் வீட்டில் இருந்த 70 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தனது மாமாவின் பைக்கை எடுத்து கொண்டு 120 கி.மீ பயணித்து கோவையை வந்தடைந்துள்ளான்.
கையில் புதிய ஆடைகள் உணவு பொட்டலத்துடன் அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்க வந்த சிறுவன் மீது சந்தேகமடைந்த ஊழியர்கள் திருப்பி அனுப்ப முற்பட்டுள்ளனர். அப்போது அங்கு உணவு அருந்த வந்த நுண்ணறிவுப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சதாசிவம், சிறுவனிடம் விசாரித்துள்ளார்.
விசாரித்ததில் சிறுவன் பொய் கூற அவன் வந்த வண்டி எண்ணை வைத்து பெற்றோரை வரவழைத்து சிறுவனை எச்சரித்து, பெற்றோருக்கும் போலீசார் அறிவுரை வழங்கி சிறுவனை அனுப்பி வைத்தனர். சிறுவனின் இச்செயலால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.