தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யாவிட்டால் 65 ஆயிரம் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த திட்டம்
தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்காவிட்டால் 65 ஆயிரம் விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக நாக்குபெட்டா நல சங்கத்தினர் தெரிவித்தனர்.
ஊட்டி
தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்காவிட்டால் 65 ஆயிரம் விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக நாக்குபெட்டா நல சங்கத்தினர் தெரிவித்தனர்.
தேயிலை விவசாயம்
நீலகிரி மாவட்டத்தில் 1,33,000 ஏக்கர் பரப்பளவில் தேயிலை, 17,000 ஏக்கர் காபி, 2,400 ஏக்கர் பரப்பளவில் மிளகு, 2,000 ஏக்கரில் ஏலக்காய், 17,000 ஏக்கர் பரப்பளவில் மழை காய்கறிகள் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் தேயிலை விவசாயத்தில் மட்டும் சுமார் 65 ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் தவிர இதில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்கள் உட்பட மறைமுகமாகவும் நேரடியாகவும் சுமார் 4 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். வட இந்தியாவில் அசாம் தேயிலையை போல் தென்னிந்தியாவில் நீலகிரி தேயிலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அப்படிப்பட்ட தேயிலைக்கு கடந்த 40 வருடங்களாக சரியான விலை கிடைப்பது கிடையாது. இதனால் விவசாயிகள் பலர் விவசாயம் மேற்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். ஒரு சிலர் விவசாயத்தை கைவிட்டு சமவெளி பகுதிக்கு மற்ற வேலைகளுக்கு சென்று விடுகின்றனர்.
குறைந்தபட்ச விலை
எனவே தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வலியுறுத்தி, ஊட்டியில் நாக்குபெட்டா, படுகர் நல சங்கத் தேயிலை தூள் பாதுகாப்பு பிரிவு அமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் தொதநாடு நல சங்க தலைவர் பாபு தலைமை தாங்கினார். மேற்கு நாடு நல சங்க தலைவர் தாத்தன், புறங்காடு சீமை தலைவர் தியாகராஜன் உள்பட 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி பல்வேறு கோரிக்கை மனுக்கள் கொடுகப்பட்டு உள்ளது. கடைசியாக குன்னூர் உபாசி அரங்கில் நடந்த கூட்டத்தில் தேயிலைக்கு குறைந்தபட்ச விலை தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை கிலோ ரூ.14-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதில் 75 சதவீதம் மட்டுமே தேயிலை தூள் விற்பனையானது. 25 சதவீதம் தேங்கிவிட்டது. தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கு ரூ.22.50 ஆகிறது என்றும் அதிலிருந்து 50 சதவீதம் கூடுதலாக நிர்ணயம் செய்து ரூ.33.75 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சாமிநாதன் கமிட்டி அறிக்கை அளித்துள்ளது. ஆனால் அந்த அறிக்கையும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
எனவே வருகிற 31-ந் தேதிக்குள் தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்படி குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யாவிட்டால் அடுத்த மாதம் ஆகஸ்டு 1-ந் தேதி மாவட்டத்தில் உள்ள 65 ஆயிரம் தேயிலை விவசாயிகளை ஒன்று திரட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.