சின்ன வெங்காயத்தின் விலை இரட்டை சதம் அடித்தது ஒரு கிலோ ரூ.230 வரை விற்பனை
இஞ்சியை தொடர்ந்து சின்ன வெங்காயமும் விலையில் இரட்டை சதம் அடித்து, வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.230 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
காய்கறி விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. முதலில் தக்காளி விலை உயரத் தொடங்கியது. கடந்த மாதத்தில் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது ரூ.120 வரை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை ஆகிறது. வெளி மார்க்கெட்டில் அதைவிட அதிகமாக விற்கப்படுகிறது.
தக்காளியை தொடர்ந்து இஞ்சி விலையும் 'கிடுகிடு'வென உயர்ந்தது. தற்போது ஒரு கிலோ ரூ.260-க்கு கோயம்பேடு மார்க்கெட்டிலேயே விற்கப்படுகிறது. காய்கறி வகையில் இரட்டை சதத்தை கடந்து இஞ்சி விற்பனை ஆகி வருகிறது. இதேபோல், பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், பீன்ஸ், முருங்கைக்காய், அவரைக்காய், பாகற்காய் உள்பட சில காய்கறியின் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வருகிறது.
இரட்டை சதம் அடித்தது
இது ஒரு புறம் இருக்க பூண்டு விலையும் யாரும் எதிர்பாராத விதமாக எகிறியது. அதுவும் ஒரு கிலோ ரூ.200-ஐ தாண்டி மார்க்கெட்டுகளிலும், கடைகளிலும் விற்பனை ஆகிறது.
இந்த வரிசையில் தற்போது சின்ன வெங்காயமும் இடம்பெற்று விட்டது. நேற்று முன்தினம் வரை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.120 முதல் ரூ.140 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் விலை உயர்ந்துவிட்டது.
கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை உயர்ந்து, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.160 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டுகளில் ரூ.230 வரை விற்பனையானது. இதன் மூலம் இஞ்சியை தொடர்ந்து சின்ன வெங்காயம் விலையும் இரட்டை சதம் அடித்து இருக்கிறது.
வரத்து குறைவு
சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து விட்டது. இதன் காரணமாகவே அதன் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து உள்ளது. வரக்கூடிய நாட்களிலும் அதன் விலை சற்று உயர வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கும் மேலும் பேரிடியாக அமைந்துள்ளது.