நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடக்கம் -அமைச்சர் தகவல்


நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடக்கம் -அமைச்சர் தகவல்
x

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை,

சென்னை அடையாறு, அரசு பண்ணை மற்றும் ஜோதியம்மாள் நகர் பகுதிகளில் ரூ.6 கோடியே 58 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனர்.

பின்னர், ஜோதியம்மாள் நகரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் படிப்பகத்துடன் கூடிய நூலக கட்டிடம் கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

விரைவில் தொடக்கம்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் மழைநீர் வடிகால் பணிகள், சாலைப் பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் பாதாளச் சாக்கடை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, விரைவில் முதல்-அமைச்சரால் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட உள்ளது.

பேரூரில் 400 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கும் முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட உள்ளது. சென்னை மக்களுக்கு 800 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 85 லட்சம் பொதுமக்களுக்கு ஆயிரம் மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதலாக 250 மில்லியன் லிட்டர் குடிநீர் நாளொன்றுக்கு வழங்குவதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

3 மாதத்தில்...

நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, "ஜோதியம்மாள் நகர் பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், 49 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் 3 மாத காலத்துக்குள் முடிக்கப்படும். இதேபோல, நூலகக் கட்டிடம் கட்டும் பணியும் 3 மாதத்தில் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ரூ.74 கோடியில் உயர்மட்ட பாலம்

சென்னை மதுரவாயலில் கூவம் ஆற்றின் குறுக்கே பூந்தமல்லி சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் வகையில் சின்ன நொளம்பூரில் ரூ.42.71 கோடி மதிப்பிலும், சன்னதி முதல் குறுக்குத் தெருவில் ரூ.31.65 கோடி மதிப்பிலும் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும் என சட்டமன்ற மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.

இந்த பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் உயர்மட்ட பாலத்துக்கு அடிக்கல் நாட்டினர்.


Next Story