பொதுமக்கள் எந்த நேரமும் போலீசாரை உரிமையோடு அணுகலாம்


பொதுமக்கள் எந்த நேரமும் போலீசாரை உரிமையோடு அணுகலாம்
x

பொதுமக்கள் எந்த நேரமும் போலீசாரை உரிமையோடு அணுகலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறினார்.

திருப்பத்தூர்

பொதுமக்கள் எந்த நேரமும் போலீசாரை உரிமையோடு அணுகலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறினார்.

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில் குறை தீர்வுக்கூட்டம் திருப்பத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூபபிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேஷ், சுரேஷ்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பொதுமக்கள் 94 பேரிடம் இருந்து புகார் மனுகளை பெற்று கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு. 19 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுத்தார்.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

15 நாட்களில் நடவடிக்கை

பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கின்றனர். அவ்வாறு பெறப்படும் புகார் மனுக்கள் மீது 15 நாட்களில் தீர்வு காண வேண்டும். அப்படி தீர்வு கிடைக்காவிட்டால் பொதுமக்கள் மேல் அதிகாரிகளிடம் மனு அளிக்கலாம். மனுக்கள் மீது 15 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மனு அளித்த பொதுமக்கள் என்னிடம் நேரில் மனு அளிக்கலாம்.

வாரந்தோறும் புதன்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கலாம். அந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தீர்வு காணாமல் இருந்தவர்களை இன்று (நேற்று) நேரில் வரவழைத்து, அவர்களிடம் புகார் மனுக்கள் பெறப்பட்டது.

94 பேரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, அதில் 19 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உரிமையோடு அணுகலாம்

மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, போதை பொருள் நடமாட்டம், மணல் திருட்டு, காட்டன் சூதாட்டம், சாராய விற்பனை உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். போலீசாரை பார்த்து பயப்பட வேண்டாம். நீங்கள் எந்த நேரமும் உரிமையோடு எங்களை அணுகலாம்.

முதல் கட்டமாக மாவட்டம் முழுவதும் இன்று (நேற்று) அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை 34 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட சோதனையில் கடந்த 5 ஆண்டுகளாக குற்ற வழக்குகளில் தொடர்பில் இருந்த 44 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த குறைதீர்வு முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story