டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும்
விழுப்புரம் சாலாமேட்டில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கலெக்டரிடம் பெண்கள் மனு கொடுத்தனா்.
விழுப்புரம்:
விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த பெண்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் சாலாமேடு ரெயில்வே கேட் அருகில் குடியிருப்புகளின் மையப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இக்கடைக்கு மது அருந்த வருபவர்கள் அங்குள்ள சாலையிலேயே அமர்ந்து மது குடிப்பதும், அருகில் உள்ள ஏரிக்கரையில் அமர்ந்து மது குடிப்பதுமாக உள்ளனர். அதுமட்டுமின்றி போதை தலைக்கேறியதும் சாலையிலேயே அலங்கோலமாக கிடக்கின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள், சாலையில் நடமாடுவதற்கு மிகவும் அச்சமாக உள்ளது. மேலும் பள்ளி குழந்தைகளிடம் நகை திருட்டில் ஈடுபடுவதும், பெண்களை அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசுவதும், வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளிடம் தகராறு செய்வதும் என தினம், தினம் பல்வேறு பிரச்சினைகள் நடந்து வருகிறது. இதுபற்றி போலீசாரிடம் தகவல் தெரிவித்தால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அதுமட்டுமின்றி குடியிருப்புகளுக்கு மத்தியிலும், ஏரிக்கரையிலும் அமர்ந்து மது குடித்து விட்டு தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் குப்பைகளை அங்கேயே போட்டுவிட்டு செல்வதால் நாங்கள் வசிக்கும் பகுதி குப்பை கிடங்குபோல மாறியுள்ளது. ஏரிக்கரையும் குப்பைக்கூளமாக மாறி வருகிறது. எனவே அந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் சி.பழனி, இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார்.