விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர்


விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர்
x

சென்னை வளசரவாக்கத்தில் விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை வாலிபர் தாக்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை

சென்னை வளசரவாக்கம் எஸ்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவருடைய மனைவி மாரியம்மாள். இவருடைய மகன் சரண் (வயது 39). நேற்று முன்தினம் இரவு சரண், தாய்-தந்தையை அடித்து உதைத்து வெளியே தள்ளிவிட்டு வீட்டை உள்புறமாக பூட்டிக்கொண்டு இருப்பதாக வளசரவாக்கம் போலீசாருக்கு மாரியம்மாள் தகவல் கொடுத்தார்.

உடனே ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமி (59) அங்கு விசாரணைக்கு சென்றார். மோகன்தாஸ், மாரியம்மாளிடம் சப்-இன்ஸ்பெக்டர் விசாரித்து கொண்டிருந்தார். அப்போது வீட்டை திறந்து வெளியே வந்த சரண், திடீரென முதல் மாடியில் நின்று கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமியை சரமாரியாக தாக்கி, மாடி படிக்கட்டில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதில் கீழே விழுந்ததில் காலில் காயம் அடைந்த முனுசாமி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த வளசரவாக்கம் போலீசார் சரணை பிடித்து விசாரித்தனர். அதில், குடிபோதைக்கு அடிமையான சரண், சில வருடங்களாக போதை மறுவாழ்வு மையம் மற்றும் மன நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சில மாதங்களுக்கு முன்புதான் வீட்டுக்கு வந்தது தெரிந்தது. அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், இதனால் தனது தாய்-தந்தையை அடித்ததாகவும் கூறப்படுகிறது. சரணை பிடித்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல ஆஸ்பத்திரியில் சேர்த்த போலீசார், மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.


Next Story