நைட்டியுடன் உலா வந்து சிறுவர்களை பார்த்து கையசைத்த திருநங்கைக்கு தர்மஅடி


நைட்டியுடன் உலா வந்து சிறுவர்களை பார்த்து கையசைத்த திருநங்கைக்கு தர்மஅடி
x

நைட்டியுடன் உலா வந்த திருநங்கை, சிறுவர்களை பார்த்து கையசைத்ததால் குழந்தையை கடத்த வந்ததாக கூறி அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

விருத்தாசலம்,

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் கடத்தப்படுவதாக கடந்த சில வாரங்களாக சமூகவலைத்தளங்களில் பல்வேறு வீடியோக்கள் பரவி வருகின்றன. ஆனால் இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் சமூகவலைத்தளங்களில் தவறாக பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். சில இடங்களில் குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களை போலீசார் கைதும் செய்துள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் விருத்தாசலம் அருகே உள்ள பூதாமூர் மெயின்ரோடு மற்றும் தெருக்களில் நேற்று மாலை நைட்டி அணிந்த 25 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் உலா வந்தார். அப்போது அவர், பெற்றோருடன் சென்ற குழந்தைகளை பார்த்து கையசைத்தார்.

இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த சிலர் அவர் குழந்தையை கடத்த வந்திருப்பதாக கருதினர். தொடர்ந்து அங்கு வந்த 10-க்கும் மேற்பட்ட நபர்கள் திருநங்கையை சுற்றி வளைத்து தாக்கினர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு வந்த பொதுமக்களும் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து விருத்தாசலம் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களின் பிடியில் இருந்த திருநங்கையை மீட்டனர். அப்போது திருநங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை விட்டு விடக்கூடாது என போலீசாரை பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

இதன் பின்னர் திருநங்கையை ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? உண்மையிலேயே குழந்தையை கடத்தி செல்ல வந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story