புதருக்குள் கிடந்த 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கத்தை கிராம மக்கள் மீட்டு வழிபாடு


புதருக்குள் கிடந்த 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கத்தை கிராம மக்கள் மீட்டு வழிபாடு
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக புதருக்குள் கிடந்த 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கத்தை கிராம மக்கள் மீட்டு வழிபாடு செய்ய தொடங்கினர்.

புதுக்கோட்டை

சிவலிங்கம்

கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி- நகரம் பாலசுப்பிரமணியர் கோவில் தெப்பக்குளத்திலிருந்து மேற்கு நோக்கி செல்லும் சாலையில் உள்ள பழமையான மாரியம்மன் கோவில் குளத்தின் மேற்கு கரையில் செடி, கொடிகள் அடர்ந்துள்ள பகுதியில் கவனிப்பார் இன்றி சிலைகள் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று பார்த்தபோது 3 அடி உயரத்தில் ஒரு விநாயகர் சிலையும், தாமரை வடிவ ஆவுடையுடன் சிவலிங்கம் சாய்ந்து கிடந்தது. எதிரே கிழக்கு நோக்கி பார்க்கும் நிலையில் நந்தி சிலையும் காணப்பட்டது. அந்தப்பகுதி முழுவதும் செங்கற்கள் சிதறிக்கிடந்தன.

900 ஆண்டுகள் பழமையானது

இந்த சிலைகள் குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆசிரியர் மங்கனூர் மணிகண்டன் கூறும் போது, சிவலிங்கத்தின் ஆவுடை தாமரை வடிவில் உள்ளதால் இது கி.பி. 11-ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி அல்லது கி.பி. 12-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தை சேர்ந்ததாக இருக்கும். மேலும் நந்தியின் அழகான வடிவமைப்பு நெற்றியில் வில்வ இலை பொறிக்கப்பட்டுள்ளதை காணும் போது சோழர்கள் காலத்தை சேர்ந்ததாக கூறலாம்.

அதாவது சுமார் 900 ஆண்டுகள் பழமையானதாக உள்ளது. ஏற்கனவே இந்த கிராமங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் இருந்துள்ளது. மேலும் விநாயகர் சிலையின் அடிப்பகுதியில் தாமரை வடிவ பீடம் உள்ளது. பீடத்தில் 7 விளக்கு குறியீடு காட்டப்பட்டுள்ளது. இந்த குறியீடுகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அபூர்வமாக கிடைத்துள்ளது. இது போன்ற 7 விளக்கு குறியீடுகள் ரோமானியாவில் காணப்படுகிறது. ஆகவே வணிக தொடர்புகள் நிறைந்த பகுதியாக நகரம் இருந்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளது என்றார். இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி'யில் வெளியிடப்பட்டது.

சிலைகளை மீட்ட கிராம மக்கள்

இதையடுத்து, வருவாய் துறையினர் அந்த சிலைகளை மீட்க சென்ற போது கிராம மக்கள் இந்த சிலைகளை வைத்து நாங்களே கோவில் கட்டிக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். அதனால் வருவாய் துறையினர் சிலைகளை மீட்காமல் சென்றனர். இந்த நிலையில் பராமரிப்பின்றி கிடந்த சிலைகளை கிராம மக்கள் மீட்டு வழிபாடு செய்ய தொடங்கியதுடன் விரைவில் புதிய கோவில் கட்டவும் முடிவு செய்துள்ளனர். மேலும் சிலைகள் கிடந்த இடத்தில் பழைய கோவில் கட்டுமானங்கள் உள்ளதா? அல்லது வேறு எங்கிருந்தும் இந்த சிலைகள் கொண்டு வரப்பட்டதா? என்று கட்டுமான பணிகள் தொடங்கும் போது தெரிய வரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story