சிற்றாறில் புலி நடமாட்டத்தால் அச்சம் எதிரொலி: தொழிலாளர்கள் 2-வது நாளாக பால் வடிக்க செல்லவில்லை ரப்பர் கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்
சிற்றாறு அரசு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பில் புலி நடமாட்டம் இருந்து வரும் நிலையில் 2-வது நாளாக நேற்று தொழிலாளர்கள் பால்வடிப்புக்கு செல்லவில்லை.
குலசேகரம்:
சிற்றாறு அரசு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பில் புலி நடமாட்டம் இருந்து வரும் நிலையில் 2-வது நாளாக நேற்று தொழிலாளர்கள் பால்வடிப்புக்கு செல்லவில்லை.
புலி நடமாட்டம்
சிற்றாறு அரசு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பில் கடந்த 5-ந் தேதி ஆட்டை புலி அடித்துச்சென்றது. அதன் பிறகு 8-ந் தேதி இரவில் பசுமாட்டை கடித்து குதறியது. அதைத்தொடர்ந்து புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் குடியிருப்பு மற்றும் வனப்பகுதி எல்லைகளில் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி புலியின் உருவத்தை பதிவு செய்யும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இரவு நேரத்தில் புலியை ஈர்த்து அதன் உருவத்தை பதிவு செய்யும் வகையில் ஒரு ஆட்டை வனப்பகுதி எல்லையில் கட்டிவைத்து மறைந்திருந்து கண்காணிக்கும் நடவடிக்கையிலும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே மோப்பநாய் ஆதித்யா வரவழைக்கப்பட்டு புலி வந்த தடங்களை சேகரித்துள்ளனர். அதே நேரத்தில் பசுமாட்டை கடித்துக் குதறியதைத் தொடர்ந்து புலி நேற்று இரவு வரை குடியிருப்பு பகுதிக்குள் வரவில்லை. மேலும் தொழிலாளர்கள் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதியைச் சுற்றி நெருப்பு மூட்டி, புலி ஊருக்குள் வந்து விடாதவாறு, தங்களை தற்காத்து கொள்ளும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
2-வது நாளாக வேலை நிறுத்தம்
புலி நடமாட்டத்தால் அச்சத்தில் உள்ள சிற்றாறு பிரிவு தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பால்வடிப்புக்குச் செல்லவில்லை. அதைத்தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் அவர்கள் வேலைக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் ரப்பர் கழக பிரிவு மேலாளர் அலுவலகத்தில் அதிகாரிகள் தொழிலாளர் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரப்பர் கழக நிர்வாகம் சார்பில் காலையில் ரப்பர் தோட்டப் பகுதிகளில் காவலாளிகளை அனுப்பி புலியின் நடமாட்டம் உள்ளதா? என கண்காணிப்பு செய்வதாகவும், வழக்கமான நேரத்தை விட காலையில் சற்று தாமதமாக வேலைக்கு வந்தால் போதும் என்றும் கூறினர்.
அதை ஏற்று கொண்ட தொழிலாளர் பிரதிநிதிகள் இன்று (புதன்கிழமை) முதல் வேலைக்கு திரும்புவதாக ஒப்புக் கொண்டனர்.
கூடுதல் மின் விளக்குகள்
இந்த நிலையில் குடியிருப்புப் பகுதிகளில் ரப்பர் கழகம் சார்பில் நேற்றுமுன்தினம் கூடுதல் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.
இது குறித்து வனத்துறையினர் தரப்பில் கூறும்போது, 'புலியின் நடமாட்டத்தை கண்டுபிடிக்கும் வகையில் இரவு, பகலாக தொடர் கண்காணிப்பில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது. அதே வேளையில் கண்காணிப்புக் கேமராக்களை அடிக்கடி போய் பார்வையிடவும் முடியாது. ஏனெனில் மனித வாசனை பதிவாகும் இடத்தில் புலி வராமலும் இருந்துவிடும். எனினும் கேமராக்களில் புலியின் உருவம் பதிவாகும் பட்சத்தில், அதன் அடிப்படையில் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அல்லது வனத்துறை உயர் அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையிலான நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொள்ளும். மேலும் குடியிருப்பு மக்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம்' என்றனர்.