டாஸ்மாக் கடையில் ரூ.67 ஆயிரம் திருட்டு
டாஸ்மாக் கடையில் ரூ.67 ஆயிரம் திருட்டு
மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி டாஸ்மாக் கடையில் ரூ.67 ஆயிரம் திருடப்பட்டது. இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரூ.67 ஆயிரம் திருட்டு
தஞ்ைச மாவட்டம், பட்டுக்கோட்டை சவுக்கண்டித் தெருவில் அரசு டாஸ்மாக் கடை(மதுபானக்கடை) உள்ளது. இந்த கடையின் விற்பனை மேற்பார்வையாளராக சீனிவாசன் (வயது 54) பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு வியாபாரத்தை முடித்து விட்டு கல்லாப்பெட்டியில் ரூ.67 ஆயிரத்து 350-ஐ வைத்து பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
அன்றைய தினம் நள்ளிரவு டாஸ்மாக் கடைக்கு வந்த மர்ம நபர்கள் அதன் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணத்தை திருடி சென்று விட்டனர்.
போலீசார் விசாரணை
மறுநாள் காலை டாஸ்மாக் கடையை திறக்க வந்த சீனிவாசன் கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருப்பது கண்டும், கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடப்பட்டு இருப்பது கண்டும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் சீனிவாசன் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.