நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மாவீரன்' படத்துக்கு தடை இல்லை


நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்துக்கு தடை இல்லை
x

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘மாவீரன்’ படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'மாவீரன்'. இந்த படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. இந்தநிலையில், இந்த படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில், இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், 'மாவீரன் படத்தில் வில்லனாக நடித்துள்ள மிஷ்கின் வரக்கூடிய காட்சிகளில், அவர் சார்ந்துள்ள கட்சியின் கொடியாக, எங்கள் கட்சியின் கொடியை பயன்படுத்தியுள்ளனர். அந்த காட்சியை நீக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

கட்சியின் கொடி

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் வி.வெங்கடேசன் ஆஜராகி, 'சிகப்பு-வெள்ளை-சிகப்பு என்ற வண்ண அடுக்குகளில் உள்ள மனுதாரர் கட்சியின் கொடியை படத்தில் பயன்படுத்தி உள்ளனர். அதுமட்டுமல்ல மனுதாரர் கட்சியினர் அணியும் வேஷ்டி, துண்டு ஆகியவற்றிலும் கட்சியின் கொடியை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கட்சியை களங்கப்படுத்தப்படுவதாக உள்ளது' என்று வாதிட்டார்.

'மாவீரன்' படத்தின் தயாரிப்பாளர் சார்பில் ஆஜரான வக்கீல் விஜயன் சுப்பிரமணியன், 'இளம் காக்கி-மஞ்சள்-இளம் காக்கி என்கிற அடுக்கில்தான் படத்தில் வரும் காட்சிகளில் கொடி வடிவமைக்கப்பட்டு உள்ளது. அது மனுதாரர் கட்சியின் கொடி வண்ணம் இல்லை. படம் வெள்ளிக்கிழமை, 750 தியேட்டர்களில் வெளியாக உள்ளன. இந்த காட்சிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றால், 10 முதல் 20 நாட்கள் ஆகும். எனவே, தடை ஏதேனும் விதித்தால் பெரும் நிதி இழப்பு ஏற்படும்' என்றார்.

பொறுப்புத்துறப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, 'மாவீரன் படத்துக்கு தடை விதிக்க முடியாது. ஆனால், சர்ச்சைக்குரிய காட்சிகள் எந்த அரசியல் கட்சிகளையும் குறித்தது இல்லை என்று படத்தின் தொடக்கத்தில் 15 வினாடிகள், இடைவேளைக்கு பிறகு 15 வினாடிகள், படம் முடியும்போது 10 வினாடிகள் என மொத்தம் 40 வினாடிகள் பொறுப்புத்துறப்பு (டிஸ்கிளைமர்) வெளியிட வேண்டும். ஆனால், இந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பின்னரே, ஓ.டி.டி. மற்றும் சாட்டிலைட் சேனல்களில் படத்தை வெளியிட வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.


Next Story