

நெல்லிக்குப்பம்
சாலை விரிவாக்க பணி
கடலூர் கோண்டூரிலிருந்து மடப்பட்டு வரை ரூ.230 கோடி செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் ஸ்டேட் பேங்க் வரை சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சரியான முறையில் அளவீடு செய்யாமல், ஆக்கிரமிப்புகளையும் அகற்றம் செய்யாமல் வடிகால் வாய்க்காலை அமைக்கும் பணியை அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கோட்ட பொறியாளர் சுந்தரி தலைமையில் அதிகாரிகள் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து திரவுபதி அம்மன் கோவில் வரை அளவீடு செய்தனர்.
தடுத்து நிறுத்தினர்
நேற்று காலை கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர் சத்யா தலைமையில் நில அளவையர் சாலை விரிவாக்க பணிக்காக அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது உடன் இருந்த ம.தி.மு.க. மாவட்ட முன்னாள் செயலாளர் ராமலிங்கம், வி.சி.க. நகர செயலாளர் திருமாறன், சமூக ஆர்வலர் குமரவேல், த.வா.க. நகர செயலாளர் கார்த்திக், கவுன்சிலர்கள் புனிதவதி, இக்பால் மற்றும் பொதுமக்கள் சரியான முறையில் அளவீடு செய்யவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கோட்ட பொறியாளர் சுந்தரி தலைமையில் மீண்டும் அளவீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்த அவர்கள் நிலத்தை அளவீடு செய்யும் பணியை தடுத்து நிறுத்தினர்.
பரபரப்பு
அப்போது அங்கிருந்த போலீசார் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர். நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து மீண்டும் அளவீடு செய்வதாக கூறினர். இதன் பின்னர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.