

திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் கேட்டு உள்ளூர் பள்ளி வாகனங்களை தடுத்து நிறுத்தியதால் தேர்வு எழுத சென்ற மாணவர்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
மத்திய மந்திரியிடம் மனு
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் தொடர்ந்து உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த கோரிக்கை விடுத்து நிர்ப்பந்தம் செய்வதால் அவ்வப்போது சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கும் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக .கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் நேற்று டெல்லி சென்று மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரியிடம் விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
இதற்கிடையே திருமங்கலத்தில் இருந்து வரக்கூடிய தனியார் பள்ளி வாகனங்களை நேற்று முன்தினம் மாலை சுங்கச்சாவடி நிர்வாகம் தடுத்து நிறுத்தி நாளை(அதாவது நேற்று) முதல் பாஸ்ட்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பாஸ்ட் டேக் பாதையில் தான் வர வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
பள்ளி வாகனங்கள் தடுத்து நிறுத்தம்
இந்த நிலையில் நேற்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு கப்பலூர் சுங்கச்சாவடி கடந்த தனியார் பள்ளி வாகனங்களை சுங்கச்சாவடி நிர்வாகம் பாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஒட்டாததால் வாகனங்களை செல்ல அனுமதிக்க முடியாது என கூறி தடுத்து நிறுத்தி உள்ளனர். பள்ளி மாணவர்களோடு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் அரையாண்டு தேர்வு எழுத செல்ல முடியாமல் பள்ளி மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியும் பள்ளி வாகனங்களை செல்ல அனுமதிக்கவில்லை. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பள்ளி வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதம் நடத்தியும் வேன் செல்ல அனுமதிக்காததால் தகவல் அறிந்த திருமங்கலம் உள்ளூர் வாகன ஓட்டிகள் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாணவர்கள் அவதி
இது குறித்து தகவல் அறிந்ததும் திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தகுமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. தொடர்ந்து வசந்தகுமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பள்ளி வாகனங்களை எடுத்துச் சென்றனர். இந்த போராட்டத்தால் தேர்வுக்கு சென்ற மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மத்திய நெடுஞ்சாலை துறை மந்திரியை சந்தித்து போராட்ட குழுவினர் நேற்று டெல்லியில் மனு அளித்த நிலையில் சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.