மாற்று இடம் கொடுத்தாங்க...! பட்டா வழங்கலையே...!


மாற்று இடம் கொடுத்தாங்க...! பட்டா வழங்கலையே...!
x
தினத்தந்தி 6 Aug 2023 6:45 PM GMT (Updated: 6 Aug 2023 6:46 PM GMT)

மணிமுக்தா அணைக்காக வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் அதற்கான பட்டா வழங்கப்படாததால் 97 குடும்பத்தினர் கடந்த 54 ஆண்டுகளாக சிரமம் அடைந்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே நெய்வாநத்தம் கிராமத்தில் கடந்த 60 வருடங்களுக்கு முன்பு சுமார் 97 குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 1969-ம் ஆண்டு மணிமுக்தா அணை கட்டுவதற்காக அந்த 97 குடும்பத்தினரின் வீடு, நிலம் என சுமார் 170 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது. இதற்கு பதில் மாற்றிடமாக 97 குடும்பத்தினருக்கு வடதொரசலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தசாமிபுரத்தில் ரிஷிவந்தியம் வனத்துறைக்கு சொந்தமான 310 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 97 குடும்பத்தினருக்கும் தலா 5 சென்ட் வீட்டு மனை மற்றும் 3 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.

இதனிடையே வனத்துறையில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு பதிலாக வருவாய்த்துறை சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு மண்மலை, பரிக்கம், எடுத்தவாய்நத்தம், பவுஞ்சிப்பட்டு, சேஷமுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 300 ஏக்கர் நிலத்தை வனத்துறைக்கு வழங்கப்பட்டது.

97 குடும்பத்தினருக்கு வழங்கபட்ட இடத்தில் கடந்த 54 ஆண்டுகளாக அவர்கள் வசித்து வருகின்றனர்.

தற்போது அது 300 குடும்பமாக உயர்ந்துள்ளது. ஆனால் இது நாள் வரை அவர்களுக்கு வீட்டுமனை மற்றும் நிலத்திற்கு பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

குடும்ப பிரச்சினை

இதனால் அப்பகுதி மக்கள் பலரும் வங்கிகளில் கடன், பயிர் கடன், பிரதமமந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உள்ளிட்டவற்றை பெற முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

குறிப்பாக குடும்ப சொத்தை பாகம் பிரிக்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க வீடு மற்றும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரி மாவட்ட நிர்வாகத்தினரிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

பயிர்க்கடன் பெற முடியவில்லை

இது குறித்து கோவிந்தசாமிபுரத்தை சேர்ந்த சுப்பு மகாலிங்கம் கூறுகையில்,

1969-ம்ஆண்டு அண்ணாதுரை முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது எனது தந்தை, மணிமுக்தா அணைக்கட்ட எங்களது நிலம் சுமார் 25 ஏக்கரை வழங்கினார். ஆனால் அதற்கு மாறாக எங்களுக்கு கோவிந்தசாமிபுரத்தில் 5 சென்டு வீட்டுமனையும், 3 ஏக்கர் விவசாய நிலம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் அந்த நிலத்திற்கு இது வரை பட்டா வழங்கவில்லை. பட்டா கேட்டு பல ஆண்டுகளாக நாங்கள் வருவாய்த்துறை, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து வருகிறோம். இருப்பினும் எங்களது பிரச்சினையை தீர்க்க எந்த ஒரு அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வங்கிகளில் பயிர்க்கடன் கூட பெற முடியவில்லை. இந்த பகுதியில் பலர், வீடு மற்றும் மின் மோட்டார்களுக்கு மின் இணைப்பு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே எங்களது சிரமங்களை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றார்.

பெண் கொடுக்க மறுப்பு

கோவிந்தசாமிபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சகாதேவன் கூறுகையில், நான் தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீசியன் படித்துள்ளேன். தற்போது ஸ்டூடியோ வைத்துள்ளேன்.

எனது தாத்தா மணிமுக்தா அணை கட்டுவதற்காக இடம் கொடுத்துள்ளார். அதற்கு மாற்றாக கோவிந்தசாமிபுரத்தில் எங்களுக்கு நிலம் மற்றும் வீட்டு மனை ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை எங்கள் பெயருக்கு பட்டா வழங்கவில்லை. இந்நிலையில் நான் தொழிலை மேம்படுத்தி கொள்வதற்காக பல்வேறு வங்கிகளில் தொழில் கடன் கேட்டபோது, உங்களது பெயரில் நிலம் உள்ளதா என கேட்கிறார்கள். இதனால் தொழில் கடன் பெற முடியாமல் எனது தொழிலை மேம்படுத்த முடியவில்லை. இதேபோல் இப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் பலரும் சிறு, குறு தொழில் தொடங்க முடியாத நிலை உள்ளது. ஒரு சில நேரங்களில் எங்கள் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு வரன் தேடும் பொது, மணமகள் வீட்டில், நிலம் இருக்கிறதா என கேட்கிறார்கள். நிலம் இருக்கிறது.ஆனால் பட்டா இல்லை என கூறினால் பெண் கொடுக்க அவர்கள் மறுக்கிறார்கள். எங்களிடம் நிலம் இருந்தும் அந்த நிலத்திற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் எனது தாத்தா, அப்பா, நான் என 3 தலைமுறையாக பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதை தவிர்க்க எங்களுக்கு அரசு உடனே பட்டா வழங்கவேண்டும் என்றார்.


Next Story