மதுக்கடைகளை காலை 7 மணிக்கே திறக்க யோசிப்பதா? தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்


மதுக்கடைகளை காலை 7 மணிக்கே திறக்க யோசிப்பதா? தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
x

மதுக்கடைகளை காலை 7 மணிக்கே திறக்க யோசிப்பதா? தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எதிர்க்கட்சியாக இருக்கும்போது மதுக்கடைகளின் எண்ணிக்கையினை குறைக்க வேண்டும், மதுக்கடைகளின் நேரத்தை குறைக்க வேண்டும் என்று கூறிய தி.மு.க., 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்த தி.மு.க., மது விற்பனையினால் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று கூறிய தி.மு.க., இப்போது மதுக்கடைகளை காலை 7 மணி முதலே திறக்க யோசித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் முத்துசாமி கூறியிருப்பது தி.மு.க.வின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

மேலும், மது அருந்துபவர்களில் 40 சதவீதம் பேரின் நலனுக்காக 90 மி.லி. மது பாக்கெட் அறிமுகம் செய்வது போன்றவை குறித்து தமிழ்நாடு அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக பேட்டி அளித்திருப்பது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. தி.மு.க. அரசினுடைய எண்ணமெல்லாம், மக்கள் மதுவைக் குடித்து அழிந்தாலும் பரவாயில்லை, அரசிற்கு வர வேண்டிய வருமானம் வந்து கொண்டே இருக்கவேண்டும். மக்களை எப்போதும் மயக்கத்திலேயே வைத்திருக்க வேண்டுமென்று தி.மு.க. அரசு நினைக்கிறது. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் செயல்.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, காலை 7 மணிக்கே மதுக் கடைகளை திறப்பது என்ற யோசனையை கைவிடவேண்டுமென்றும், படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story