திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவில் தேரோட்டம்

திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவில் தேரோட்டம்
திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவில் தேரோட்டம்
Published on

மாசிமக பெருவிழாவையொட்டி திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மாசி மகப்பெருவிழா

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகப்பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த கோவிலில் மாசி மகப்பெருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 12-ந்தேதி வரை நடக்கிறது.

தேரோட்டம்

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முன்னதாக பெருமாள், தாயார், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் தேருக்கு எழுந்தருளினர். அதனை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன், கோவில் தலைமை எழுத்தர் உமா மற்றும் கோவில் ஊழியர்கள், திருக்கண்ணபுரம் சுற்றுவட்டார கிராம பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தெப்ப திருவிழா

விழா நாட்களில் தங்க கருட சேவை, தங்க பல்லக்கு மற்றும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை சவுரிராஜப்பெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.

12-ந்தேதி இரவு 10 மணிக்கு சவுரிராஜப்பெருமாள் கோவில் முன் அமைந்துள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தில் தெப்ப திருவிழா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com