காவி அணிந்தவர்கள் எங்கள் விரோதிகள் அல்ல:'திராவிடத்திற்குள்தான் ஆன்மிகம் உள்ளது'- மதுரையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு


காவி அணிந்தவர்கள் எங்கள் விரோதிகள் அல்ல:திராவிடத்திற்குள்தான் ஆன்மிகம் உள்ளது- மதுரையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
x

காவி அணிந்தவர்கள் எங்கள் விரோதிகள் அல்ல. திராவிடத்தையும் ஆன்மிகத்தையும் பிரித்து பார்க்க முடியாது. திராவிடத்திற்குள் தான் ஆன்மிகம் உள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

மதுரை


காவி அணிந்தவர்கள் எங்கள் விரோதிகள் அல்ல. திராவிடத்தையும் ஆன்மிகத்தையும் பிரித்து பார்க்க முடியாது. திராவிடத்திற்குள் தான் ஆன்மிகம் உள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

குடிநீர் தொட்டி

மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், மதுரையில் நேற்று இரவு நடந்தது. மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திரைத்துறையில் இருந்து முன்னிலை பெற்று தமிழகத்தின் தலைவராக உயர்ந்தவர் கருணாநிதி. நடிகர்களாலும், இசையமைப்பாளர்களாலும், பாடலாசிரியர்களாலும் படங்கள் ஓடியது உண்டு. ஆனால் கதை வசனத்தால் படம் ஓடியது என்றால் அது கருணாநிதியால் தான். எந்த தேர்தலிலும் தோற்காத ஒரே தலைவர் கருணாநிதி தான். 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை. 60 ஆண்டு கால சட்டமன்ற உறுப்பினர். 5 முறை முதல்-அமைச்சராகவும், ஒரு கட்சிக்கு 50 ஆண்டு கால தலைவராக இருந்து வரலாறு படைத்தவர் கருணாநிதி. ஒவ்வொரு மாவட்டத்திலும் கோவில் இருக்கிறதோ, இல்லையோ குடிநீர்த்தொட்டிகளை உருவாக்கியவர் கருணாநிதி. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை ஒரு மாநகராட்சியாக உருவாக கருணாநிதி தான் காரணம். அதே போல் சென்னைக்கு அடுத்து மதுரைக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளையை அமைத்து கொடுத்தது கருணாநிதி தான்.

கலைஞர் மருத்துவமனை

தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதை போல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் மொத்த கொள்கைகளை கொண்ட ஆட்சியை நடத்துவதே திராவிட மாடல் ஆட்சி. எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல். கொரோனாவில் இருந்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றியவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அவர் கொரோனா உடையணிந்து கொேரானா வார்டுக்குள் சென்றதால் அமைச்சர்களான நாங்களும், எம்.எல்.ஏ.க்களும் கொரோனா உடை அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்றோம். எங்களை பார்த்து மருத்துவர்களும் பயமின்றி கொரோனா சிகிச்சையை மேற்கொண்டனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறதோ இல்லையோ சென்னையில் கலைஞர் மருத்துவமனை வந்துவிட்டது. விரைவில் கலைஞர் நூலகம் வரஉள்ளது.

விரோதிகள் அல்ல

காவி அணிந்தவர்கள் எல்லாம் எங்கள் விரோதிகள் அல்ல. காவி அணிந்து நல்லதை செய்தால் அவர்கள் எங்கள் நண்பர்கள். இனி திராவிடத்தையும் ஆன்மிகத்தையும் பிரித்து பார்க்க முடியாது, திராவிடத்திற்குள் தான் ஆன்மிகம் உள்ளது. எங்கள் தாய்மொழி தமிழ். எங்கள் சாமிக்கு எங்கள் மொழி தான் புரியும். ஆனால் புரியாத மொழியிலே, சாமிக்கே தெரியாத மொழியாலே பூஜை செய்து, கும்பத்திலே தண்ணியை ஊற்றி என்ன பயன்?

இவ்வாறு அவர் பேசினார்.


Related Tags :
Next Story