திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரியில் தேசிய எறிபந்து போட்டி
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரியில் தேசிய அளவிலான எறிபந்து போட்டி நடைபெற்றது.
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் 32-வது தேசிய எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதற்கு கல்லூரி தலைவர் ரகுராம் தலைமை தாங்கினார். அண்ணா பல்கலைக்கழக உடற்கல்வி துணை இயக்குனர் இவ்லின் சிந்தியா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். அதையடுத்து நடந்த போட்டியில் கேரளா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் ஆண்கள் பிரிவில் டெல்லி அணி முதலிடத்தையும், தமிழ்நாடு அணி 2-ம் இடமும் பிடித்தது. மத்திய பிரதேச அணி 3-ம் இடத்தை கைப்பற்றியது.
பெண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி முதலிடமும், டெல்லி அணி 2-ம் இடமும், கேரளா அணி 3-ம் இடமும் பிடித்தன. வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகி வாசுதேவன், இந்திய எறிபந்தாட்ட கழக பொருளாளரும், தமிழ்நாடு எறிபந்தாட்ட தலைவருமான பாலவிநாயகம், இந்திய எறிபந்தாட்ட கழக பொதுச்செயலாளர் நரேஷ்மேனன், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் விஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.