திருப்பதி கோவிலில் ஜூலை மாத உண்டியல் வருமானம் ரூ.139.33 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 23 லட்சத்து 40 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள்.
திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேகற்று பேசினார். அவர் பேசியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பக்தர்கள் மூல மூர்த்தியை திருப்திகரமாக தரிசனம் செய்வதற்கும், வாகன சேவைகளை பின்னணியில் இருந்து தரிசிப்பதற்கும் போதிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.
செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கொடியேற்றம், அக்டோபர் மாதம் 1-ந்தேதி கருடசேவை, 2-ந்தேதி தங்கத்தேரோட்டம், 4-ந்தேதி மரத்தேரோட்டம், 5-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலின் நான்கு மாட வீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகனச் சேவைகளை நடத்த பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறோம். சாதாரணப் பக்தர்களுக்கு இலவச தரிசனம் வழக்கம்போல் அளிக்கப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 23 லட்சத்து 40 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் வருமானமாக ரூ.139 கோடியே 33 லட்சம் கிடைத்துள்ளது.
நேற்று முன்தினம் 74 ஆயிரத்து 497 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 36 ஆயிரத்து 244 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.5 கோடியே 15 லட்சம் கிடைத்தது. இவ்வாறு அவர் பேசினார். இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.