தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு 2-வது சிறந்த வங்கிக்கான ஆசிய விருது
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு 2-வது சிறந்த வங்கிக்கான ஆசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த ஆசிய வங்கி
கொல்கத்தா இந்திய வர்த்தக தொழிற்சங்கம், வங்கிகளின் திறமையான செயல்பாடுகளின் அடிப்படையில், தலைசிறந்த நடுவர்களை கொண்டு சிறந்த வங்கியை தேர்வு செய்து, வளர்ந்து வரும் ஆசிய வங்கி விருதுகளை வழங்கி வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு சிறிய வங்கி பிரிவில் சிறந்த 2-வது வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த வங்கியின் இடர்மேலாண்மை, லாபம் ஈட்டுதல், கடன் வழங்கியதன் தரம் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
விருது
இந்த விருது வழங்கும் விழா, கோவாவில் நடந்தது. விழாவில் இந்திய வர்த்தக தொழிற்சங்க ஏற்றுமதி கமிட்டியைச் சேர்ந்த அட்லானு சென் தலைமை தாங்கி, வளர்ந்து வரும் ஆசிய வங்கி விருதை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பொதுமேலாளர் (செயல்பாடுகள் மற்றும் சேவைகள் துறை) சூரியராஜிடம் வழங்கினார்.
இதுகுறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், ''விருது பெற்ற மகிழ்ச்சியை வங்கியின் அனைத்து உடைமைதாரர்களுக்கும் பகிர்கிறோம். விருதுகள், எங்களது வங்கியில் உள்ள அனைவரையும் இன்னும் சிறப்பாக செயல்பட்டு மேலும் வளர்ச்சி அடையவும் ஊக்கம் அளிக்கிறது'' என்று கூறினார்.