மாரண்டஅள்ளி பகுதியில் தக்காளி கிலோ ரூ.140-க்கு விற்பனைஇல்லத்தரசிகள் அதிர்ச்சி
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி பகுதியில் தக்காளி விலை ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தக்காளி சாகுபடி
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதிகளான பஞ்சப்பள்ளி, சாமனூர், அத்தி முட்லு, கானூர், அகரம், கல்லாகரம், சாஸ்திரமுட்லு, உலகானஅள்ளி, கென்டேனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்வது வழக்கம். இப்பகுதிகளில் சாகுபடி செய்யும் தக்காளிகள் பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, ராயக்கோட்டை, ஜிட்டான்டஅள்ளி, பகுதிகளில் அமைந்துள்ள தக்காளி மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தக்காளி பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இல்லத்தரசிகள் அதிர்ச்சி
இந்த பகுதியில் தக்காளி விலை கடந்த மாதம் விலை வீழ்ச்சி அடைந்து இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கிடுகிடு வென உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தாண்டி விற்பனை ஆகி வந்தது. நேற்று கிலோ ரூ.140 வரை விற்பனையானது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வெயிலின் தாக்கம்
தக்காளி விலை உயர்வுக்கான காரணம் குறித்து மாரண்டஅள்ளி பகுதி காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவி கூறுகையில், தக்காளிகளில் விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் தக்காளி செடிகளில் போதுமான அளவு காய்ப்புதிறன் இல்லாததால் குறைந்த அளவிலேயே தக்காளி மகசூல் கிடைக்கிறது. இந்த ஆண்டு கோடை வெயில் பிப்ரவரி மாதத்தில் தொடங்கியதால் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் காரணமாக விவசாய நிலங்களில் தக்காளி செடிகள் கருகியது. இதனால் தக்காளி நடவு செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதன் சாகுபடி பரப்பளவு குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்து உள்ளது என தெரிவித்தார்.